தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது‌. ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோடை காலத்தில் மழை பெய்து வருவது வெப்பத்தை தணிக்கும் விதமாக இருப்பதால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.