இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் அமைக்க உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் உத்தேச பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு சில ஆசிரியர்கள் போலியான காரணங்களுடன் மருத்துவச் சான்றிதழ்களை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து தேர்தல் பணியை புறக்கணிக்க முயற்சி செய்கிறார்கள். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலியான காரணங்களுடன் தேர்தல் பணியை புறக்கணிக்கும் பட்சத்தில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.