தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தின் போது காவல்துறையினருக்கு சில முக்கியமான அறிவுரைகளை வழங்கினார். இது குறித்து முதல்வர் கூறியதாவது, திமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரனார் நினைவு நாள், பாபர் மசூதி இடிப்பு போன்றவைகள் அமைதியான முறையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மற்றும் கோயம்புத்தூர் சம்பவங்களிலும் காவல்துறை துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் அது போன்ற பிரச்சினைகள் வராத அளவுக்கு முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏழை, எளிய மக்கள், பெண்கள் ஆகியோர் காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்கும்போது அவர்களுடைய புகார் முறையாக வாங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் காவல்துறையினர் அமைதியை பாதுகாக்கும் வகையில் தனி கவனம் செலுத்த வேண்டும். மாநிலத்தில் கொலை, கூட்டுக் கொலைகள், ஆதாய கொலைகள்,  கொள்ளை  சம்பவங்கள் போன்றவைகள் நடைபெறாத அளவுக்கு காவல்துறை செயல்பட வேண்டும்.

கொள்ளை சம்பவங்களில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நகையை மீட்டுக் கொடுக்க வேண்டும். காவல்துறையினரின் செயல்பாடுகளால் தான் மக்களுக்கு காவல்துறை நண்பன் என்ற எண்ணம் வரும். சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் சக்திகளை எந்த காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது. குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட, மாநகரத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். மேலும் காவல்துறையினர் களப்பணிகளுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்வதோடு உரிய முறையில் விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.