தமிழகத்தில் முதன்முறையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன் முறையாக பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 27 பள்ளிகளிலும் பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பசுமை பள்ளி திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு பள்ளியில் சொட்டு நீர் பாசன முறையில் காய்கறி தோட்டம் அமைக்கும் பணியை பார்வையிட்டதோடு சிறுவகை மீன் பண்ணையை திறந்து வைத்து அதில் மீன் குஞ்சுகளையும் விட்டார்.

அதன் பிறகு எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஏற்பாட்டில் குதிரை வண்டியில் ஏறி 2 கிலோமீட்டர் தூரம் வரை அதில் பயணித்து கொரடாச்சேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு தோட்டம் அமைப்பதற்கான விதை தொகுப்புகளை மாணவிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளுக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 11, 12-ம் வகுப்புகளைச் சேர்ந்த விவசாய பிரிவு மாணவர்கள் பயன் பெரும் நோக்கத்தில் பசுமை பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல் கட்டமாக 500 பள்ளிகளில் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதோடு படிப்படியாக உயர்நிலைப் பள்ளிகளிலும் திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டை பெறும். மேலும் காலை உணவு திட்டத்தையும் படிப்படியாக விரிவு படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.