
இந்திய தூர ஓட்ட வீரர்கள் பிரதான் கிரூல்கர் மற்றும் விவேக் மோர் ஆகியோர், தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள் பயன்படுத்தியதற்காக முறையே 3 மற்றும் 5 ஆண்டுகள் விளையாட தடை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கடந்த டிசம்பர் 15, 2024 அன்று நடைபெற்ற புனே ஹாஃப் மாரத்தான் போட்டியில் இருவரின் யூரின் டெஸ்ட் செய்ததில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. கிரூல்கர் அந்தப் போட்டியில் 1 மணி 4 நிமிடங்கள் 22 விநாடிகளில் வெற்றி பெற்றிருந்தார். சோதனையில் Meldonium இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆரம்பத்தில் 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட இருந்த நிலையில், அவர் தவறை ஒப்புக்கொண்டதற்காக 3 ஆண்டுகளாக தடை குறைக்கப்பட்டது. அவரது தடை பிப்ரவரி 19 முதல் அமலுக்கு வந்துள்ளது.
24 வயதான விவேக் மோரின் சிறுநீர் சோதனையில் (urine test ) Mephentermine, Meldonium மற்றும் dEPO என மூன்று விதமான தடை செய்யப்பட்ட மருந்துகள் இருந்ததால், அவருக்கு 6 ஆண்டு தடை விதிக்கப்பட இருந்தது. ஆனால், அவர் தனது தவறை ஒப்புக்கொண்டதால் 5 ஆண்டுகளுக்கு தடை குறைக்கப்பட்டது. அவரது தடை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதே போட்டியில் பங்கேற்ற அர்ச்சனா ஜாதவ் என்பவர், Oxandrolone எனும் தடையூக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால், 4 ஆண்டுகளுக்கு விளையாட்டு தடை விதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் இந்திய வீரர்களின் மீது தடையூக்கப் பயன்பாடு அதிகரித்திருப்பது கவலைக்குரியதாக உள்ளது.