திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் பூக்கொல்லை  தெருவை சேர்ந்தவர் ஷேக் தாவுது (40). இவர் பிறவிலேயே காது கேட்காத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவர் அப்பகுதியில் தையல்காரர் ஆக தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு ரஹ்மத் பேகம் (31) என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மேலும் ஷேக் தாவூதின் தங்கை குடும்பத்தினர் அவரது வீட்டின் முதல் தளத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் ஷேக் தாவூதின் தங்கை கணவர் அப்துல் அஜீஸ் (36), ஷேக் தாவூதின் மனைவி ரஹ்மத் பேகம் உடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ஷேக் தாவுது மற்றும் அவரது தங்கை மும்தாஜ், தந்தை அமீர் பாஷா ஆகியோர் இருவரையும் கண்டித்தனர். இருப்பினும் அவர்கள் இருவரும் அந்தத் தொடர்பை கைவிடவில்லை.

இதனால் ஷேக் தாவூதிருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி அன்று ஷேக்தாவுது  திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனை பயன்படுத்தி அவரது மனைவி மற்றும் அப்துல் அஜீஷும் ஷேக்தாவூதை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நன்றாக கவனித்துக் கொள்வது போல நடித்து மருத்துவர்கள் இடமிருந்து மாத்திரைகளை வாங்கி வந்து கொடுத்துள்ளனர்.

இதனிடையில் டாக்டர்கள் எழுதிக் கொடுத்த மாத்திரைகளுக்கு பதிலாக 10 தூக்க மாத்திரைகளையும் அப்துல் அஜீஸ் மற்றும் ரஹ்மத் பேகம் இருவரும் ஷேக் தாவுத்துக்கு கொடுத்துள்ளனர். அதன் பின் இருவரும் நள்ளிரவு 2 மணி அளவில் ஷேக் தாவூதின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி கொலை செய்ய முயற்சி செய்தனர். அப்போது ஷேக் தாவூதின் பெரியப்பா மகன் சபி என்பவர் இதனை நேரடியாக பார்த்துள்ளார்.

உடனே இருவரும் சபியை மிரட்டி அனுப்பி வைத்துவிட்டு ஷேக்தாவுதை தலையணையால் அமிக்கி கொலை செய்துள்ளனர். அதன் பின் காலை 7 மணி அளவில் ரஹ்மத் பேகம் தனது கணவர் உடல் நலக்குறைவால் உயிர் இழந்து விட்டதாக அழுது நாடகமாடியுள்ளார். ஆனால் சபி நள்ளிரவில் நடந்த சம்பவங்களை அனைவரிடமும் கூறினார். இதனை அடுத்து ஷேக் தாவுது குடும்பத்தினர் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஷேக் தாவுது கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் ரஹமத் பேகம் மற்றும் அப்துல் அஜீசையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதன் பின் இது குறித்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மேலும் அந்த வழக்கை காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி வாதாடினார். விசாரணை குறித்த அனைத்து ஆதாரங்களையும் விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், குற்றம் சாட்டப்பட்ட அப்துல் அஜீஸுக்கும் ரஹ்மத் பேகத்திற்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.