டெல்லியில் நடந்த ‘இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026’ மாநாட்டில், கல் கோட்டியாஸ் பல்கலைக்கழகம் சீனாவிலிருந்து வாங்கப்பட்ட ‘யுனிட்ரீ கோ2’ என்ற ரோபோ நாயை (Orion), தாங்களே சொந்தமாகத் தயாரித்ததாகக் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்த அந்தப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நேகா சிங், அவசரத்தில் தவறாகப் பேசிவிட்டதாகவும், மாணவர்கள் உத்வேகம் பெறவே அதை வாங்கி வந்ததாகவும் கூறினார். மேலும், “உங்களுக்கு 6 ஆகத் தெரிவது எனக்கு 9 ஆகத் தெரியலாம்” (Your 6 can be 9) என அவர் கொடுத்த விளக்கம், சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் கிண்டலுக்கு உள்ளானது.

​இந்தச் சூழலில், சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்பு 1986-ல் வெளியான ‘ஆக்ரி ராஸ்தா’ படத்தில் அமிதாப் பச்சன் பேசிய “அங்கிருந்து பார்த்தால் 6, இங்கிருந்து பார்த்தால் 9” என்ற அதே வசனத்தோடு இந்தச் சம்பவத்தை இணைத்து மீம்கள் பறக்கின்றன. அதுமட்டுமின்றி, அந்தப் பல்கலைக்கழகம் காட்சிப்படுத்திய ட்ரோன்களும் வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்டவை என நெட்டிசன்கள் ஆதாரத்தோடு வறுத்தெடுத்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல், அந்தப் பல்கலைக்கழகத்தினர் மாநாட்டை விட்டு பாதியிலேயே வெளியேறியது தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.