அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்குச் சொந்தமான புளோரிடா மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) சொகுசு விடுதிக்குள் இன்று (பிப்ரவரி 22, 2026) அதிகாலை 1:30 மணியளவில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர் ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர், கையில் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேன் ஆகியவற்றுடன் வடக்கு வாசல் வழியாக நுழைய முயன்றபோது, ரகசிய சேவை  ஏஜெண்டுகள் மற்றும் உள்ளூர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறிச் செயல்பட்டதால், அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணையில், உயிரிழந்த இளைஞர் வட கரோலினா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் காணாமல் போனதாகச் சில நாட்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது. இந்தச் சம்பவத்தின் போது அதிபர் ட்ரம்பும் அவரது மனைவி மெலனியாவும் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்ததால், அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் ட்ரம்ப் மீது நடந்த கொலை முயற்சித் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.