இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரைச் சேர்ந்த அனிகா ரோஸ் என்ற பெண், ‘அரவணைப்பு நிபுணராக’ (Cuddle Professional) மாறி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இன்றைய அவசர உலகில் தனிமையால் வாடும் மக்களுக்கும், மன அழுத்தத்தால் தவிப்பவர்களுக்கும் ஆறுதல் அளிப்பதையே இவர் தனது தொழிலாக மாற்றி வைத்துள்ளார். அனிகா ரோஸை அணுகும் வாடிக்கையாளர்கள், அவரிடம் ஒரு மணிநேரம் ஆறுதலாகக் கட்டிப்பிடித்துக் கொள்வதற்கும், மன அமைதி பெறுவதற்கும் இந்திய மதிப்பில் சுமார் ₹7,400 கட்டணமாகச் செலுத்துகின்றனர்.

​இந்த “கட்டிப்பிடி வைத்தியம்” வெறும் வணிகமாக மட்டும் பார்க்கப்படாமல், ஒரு சிகிச்சையாகவும் பார்க்கப்படுகிறது. இவரிடம் வரும் வாடிக்கையாளர்கள், அனிகாவின் அணைப்பால் தங்களுக்குப் பாதுகாப்பு உணர்வு கிடைப்பதாகவும், நீண்ட நாட்களாக இருந்த மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி அதிகரிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். தனிமை என்பது ஒரு நோய் போலப் பரவி வரும் சூழலில், ஒருவரின் ஆறுதலான அணைப்பிற்கு இவ்வளவு கிராக்கி இருப்பது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. அனிகாவின் இந்த வினோத தொழில் தற்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.