ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் எச்சரித்து வருவதால் பதற்றம் தணியவில்லை. இந்தச் சூழலில், இஸ்ரேல் தூதர் ரூவன் அசர் அளித்துள்ள பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிரான தாக்குதல் தொடரும் என்றும், இஸ்ரேலின் இலக்குகள் நிறைவேறும் வரை போர் ஓயாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், ஈரான் தலைமைக்குள் அதிகாரப் போட்டி நிலவுவதாகவும், அந்நாட்டின் உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி கோமா நிலையில் இருப்பதாகக் கூறப்படும் தகவல்களால் அங்கு குழப்பம் நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான் மீது தங்களுக்குத் துளிக்கூட நம்பிக்கை இல்லை என்றும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை அமெரிக்கா ஓரங்கட்ட வேண்டும் என்றும் இஸ்ரேல் தூதர் சாடியுள்ளார். அதே சமயம், கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவின் பங்களிப்பைப் பாராட்டியுள்ள அவர், சர்வதேச கடல் வழித்தடங்களை ஈரான் முடக்க முயன்றால் மீண்டும் போர் வெடிக்கும் என எச்சரித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் ஈரானுக்குத் தனது பலத்தைப் பெருக்கிக்கொள்ள உதவும் வாய்ப்பாக அமைந்துவிடுமோ என்ற அச்சமும் இஸ்ரேலுக்கு உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்குப் பிறகே, இந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவுமா அல்லது போர் தீவிரமடையுமா என்பது தெரியவரும்.
