மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில் உள்ள கல்வா ஆற்றுப் பகுதியில் (Kalwa Creek) இன்று காலை சுமார் 11:30 மணியளவில், தண்ணீரின் ஆழம் தெரியாமல் ஆற்றுக்குள் இறங்கி மூழ்கிக் கொண்டிருந்த 30 வயது வாலிபர் ஒருவரை, அங்கிருந்த 4 வயது சுட்டிக்குழந்தையின் அசாத்திய சாமர்த்தியத்தாலும், தீயணைப்பு வீரர்களின் அதிரடி மீட்பு நடவடிக்கையாலும் பத்திரமாக உயிருடன் மீட்டுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒட்டுமொத்தப் பொதுமக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சாகேத் ரோடு அருகே உள்ள ஆற்றுப் பகுதியில் நௌஷாத் மெஹ்ரூம் என்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை, அங்கு விளையாட வந்த வருண் நிகாதே என்ற 4 வயது சிறுவன் தற்செயலாகப் பார்த்துள்ளான். ஆபத்தை உணர்ந்த அந்தச் சிறுவன், சற்றும் பயப்படாமல் விறுவிறுவென ஓடிப் போய் அங்கிருந்த போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளான்.

உடனே உஷாரான போலீஸார், அந்த வழியே வந்த தீயணைப்பு வாகனத்தை மறித்து, மீட்புக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு தீயணைப்பு அதிகாரி சந்தீப் கதம் மற்றும் வாகன ஓட்டுநர் கணேஷ் கவாரி ஆகியோர் சற்றும் யோசிக்காமல் ஆற்றுக்குள் குதித்து, சுமார் 15 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு அந்த வாலிபரை பத்திரமாக மீட்டெடுத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மீட்கப்பட்ட அந்த வாலிபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ள நிலையில், அவரைத் தானே நகர் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் ஒரு உயிரைக் காப்பாற்றக் காரணமாய் இருந்த அந்த 4 வயதுச் சிறுவனின் சமயோசித புத்தியையும், ஆற்றில் குதித்துக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களின் தீரத்தையும் அந்த ஊரின் மேயர் ஷர்மிளா மற்றும் மாநகராட்சி ஆணையர் சௌரவ் ராவ் ஆகியோர் நேரில் பாராட்டியுள்ள தகவல் தற்பொழுது சோசியல் மீடியா ஏரியாக்களில் காட்டுத்தீயாய் பரவி, “பெரியவங்களுக்கு இல்லாத புத்தி இந்தச் சின்னப் பையனுக்கு இருக்கு பாஸ்!” என்று நெட்டிசன்கள் மத்தியில் செம ட்ரெண்டாகி லைக்ஸ்களை அள்ளி வருகிறது.