சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ செய்வதற்காக அதிவேகமாக பைக் ஸ்டண்ட் செய்த மூன்று இளைஞர்கள், கன்டெய்னர் லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கோரச் சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மௌகஞ்ச் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில்  மோட்டார் சைக்கிள்களில் சென்ற இளைஞர்கள், ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்து அதனை வீடியோ எடுத்துள்ளனர். ஒரு பைக்கில் மூன்று பேர் அமர்ந்து செல்ல, மற்றொரு பைக்கில் இருந்தவர்கள் அவர்களை வீடியோ எடுத்துக்கொண்டே வந்துள்ளனர்.

 

குறிப்பாக, பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு இளைஞர் கையில் துப்பாக்கியை  வைத்துக்கொண்டு, சினிமா பாணியில் மிரட்டலாக போஸ் கொடுத்தபடி ரீல்ஸ் செய்துள்ளார். நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் சென்றுகொண்டிருந்த வேளையில், அவற்றிற்கு மிக அருகில் ‘கட்’ அடித்து இளைஞர்கள் பைக்கை ஓட்டியுள்ளனர். வீடியோ எடுப்பவர்களுக்காக பைக்கின் வேகத்தை அவர்கள் மிதமிஞ்சி அதிகரித்துள்ளனர். அப்போது, முன்னால் சென்றுகொண்டிருந்த இரண்டு கன்டெய்னர் லாரிகளுக்கு இடையே புகுந்து செல்ல முயன்றபோது, பைக்கின் வேகம் கட்டுப்பாட்டை மீறியது. இதில் நிலைதடுமாறிய பைக், பக்கவாட்டில் இருந்த கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பைக்கில் இருந்த மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு, லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த இளைஞர்கள் குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். சமூக வலைதளப் புகழுக்காக இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணையம் வைப்பது வேதனை அளிக்கிறது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் ஸ்டண்ட் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வீடியோ எடுக்கும் மோகத்தால் மூன்று இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.