இங்கிலாந்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம் குஜராத் கலவரத்தை மையப்படுத்தி பிரதமர் மோடி குறித்து ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டு இருந்தது. இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆவணப்படத்திற்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிபிசி ஆவணப்பட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டார்கள். இந்த சோதனையை தொடர்ந்து 15-ம் தேதியும்  பிபிசி அலுவலகத்தில் சோதனை நடைபெற்ற நிலையில், 16-ம் தேதியும்பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள். இதன் காரணமாக பிபிசி நிறுவன ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சர்வதேச வரி விவகாரங்கள் பிபிசி அலுவலகத்தில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஐடி ரெய்டு தற்போது முடிவுக்கு வந்த நிலையில் இது தொடர்பாக பிபிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் இந்தியாவில் பிபிசி நிறுவனம் மீண்டும் சுமூக நிலைக்கு திரும்பியுள்ளது. பிபிசி செய்தி நிறுவனம் நம்பகமான சுதந்திர அமைப்பாகும். எங்கள் சக ஊழியர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவாக நிற்கிறோம். அவர்கள் அச்சமின்றி தொடர்ந்து செய்திகளை வெளியிடுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.