தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தற்போதே அரசியல் களம் அதிரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பிரபல ‘சோகோ’ (Zoho) நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீதர் வேம்பு, டெல்லி விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு சுவாரசியமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். பாதுகாப்புச் சோதனையில் இருந்த ஒடிசாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ஸ்ரீதர் வேம்புவின் உடையைப் பார்த்து அவர் தமிழர் என்பதை அறிந்து, மிகுந்த ஆர்வத்துடன் “சார், தளபதி விஜய் ஜெயிப்பாரா?” என்று கேட்டு அவரைத் திணறடித்துள்ளார்.

விஜய்யின் அரசியல் தாக்கம் தமிழ்நாட்டைத் தாண்டி வெளி மாநில அதிகாரிகளிடமும் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதற்கு இதுவே சாட்சி என ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார்.

“>

விஜய்யின் அரசியல் வருகை வெறும் சினிமா கவர்ச்சியால் உருவானது மட்டுமல்ல என்பதைத் தனது கிராமத்து விவசாயி ஒருவரின் பேச்சின் மூலம் ஸ்ரீதர் வேம்பு விளக்கியுள்ளார். முன்னதாக அண்ணாமலைக்காக வேலை பார்த்த அந்த விவசாயி, இம்முறை விஜய் ஒரு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தப் போகிறார் எனக் கூறியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திமுக, அதிமுக எனப் பாரம்பரியக் கட்சிகளின் பணபலம் மற்றும் கட்டமைப்பால் அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தான் கருதினாலும், மிகக் குறுகிய காலத்தில் விஜய் உருவாக்கியுள்ள இந்த “விஜய் அலையை” சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். கருத்துக்கணிப்புகளைத் தாண்டி, ஒரு புதிய கட்சி எல்லா தரப்பு வாக்குகளையும் பிரிக்கும்போது முடிவு கணிக்க முடியாத ஒன்றாக இருக்கும் என்பதே ஸ்ரீதர் வேம்புவின் கருத்தாக உள்ளது.