இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட தலையீடுதான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், டிரம்பின் இந்த துரிதமான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையே மில்லியன் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியதாகவும், அமைதியை நிலைநாட்டியதாகவும் குறிப்பிட்டார்.
இதற்காக பாகிஸ்தான் எப்போதும் டிரம்ப்பிற்கு நன்றிக்கடன்பட்டிருக்கும் என்றும், அவரை ஒரு “அமைதி மனிதர்” என்றும் ஷெபாஸ் ஷெரிப் புகழாரம் சூட்டியுள்ளார். இருப்பினும், ஷெரிப்பின் இந்தக் கூற்றை இந்தியா முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரங்களில் எந்தவொரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமும் இல்லை என்றும், அவர் கூறியுள்ளார்.
இதனால் போர் நிறுத்தம் தொடர்பான புரிதல் இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாகவே எட்டப்பட்டது என்றும் இந்தியா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா தனது எல்லைப் பகுதியில் பயங்கரவாதத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
