அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே வெடிக்கவிருந்த மிகப்பெரிய போரைத் தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் ஒருமுறை உரிமை கொண்டாடியுள்ளார். வெள்ளை மாளிகையில் எரிசக்தி துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த மே 2025-ல் இரு நாடுகளுக்கும் இடையே எட்டு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், தனது துரிதமான தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டதாகக் கூறினார்.
மேலும் அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான இந்த மோதலை நிறுத்தியதன் மூலம் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும், முன்னாள் அதிபர் ஒபாமா எவ்விதப் பணியும் செய்யாமல் அந்தப் பரிசைப் பெற்றதாகவும் அவர் விமர்சித்தார். இருப்பினும், டிரம்பின் இந்தக் கூற்றை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது எல்லையில் நிலவிய பதற்றத்தைத் தணிக்க எந்த ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தையும் இந்தியா ஏற்கவில்லை என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி பேச்சுவார்த்தை மூலமே போர் நிறுத்தம் எட்டப்பட்டது என்றும் இந்திய வெளியுறவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் அரசு டிரம்பின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்துள்ள சூழலில், அவர் தொடர்ந்து இதுபோன்ற கருத்துகளைப் பகிர்ந்து வருவது சர்வதேச அரசியலில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
