சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில், டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபட்டபோது உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த நபர் ஒருவர் ரயிலில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் குழுவினர் ரயிலில் ஏறி சோதனையிட்டனர். அப்போது முதல் வகுப்பு பெட்டியில் டிக்கெட் இன்றி பயணித்த ஒருவரிடம் அபராதம் வசூலிக்க முயன்றபோது, அவருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ரயில் அத்திப்பட்டு நிலையத்தை அடைந்தபோது, அந்த நபர் திடீரென ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்தச் சம்பவத்தின் போது, ரயில்வே அதிகாரிகள் தான் அந்த நபரை கீழே தள்ளிவிட்டதாக தவறாக எண்ணிய அங்கிருந்த பயணிகள், டிக்கெட் பரிசோதகர்களைத் தாக்க முயன்றனர். பாதுகாப்புப் படை காவலர் உடனடியாக அதிகாரிகளை முன்பதிவு அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று பாதுகாத்த போதிலும், சில பயணிகள் அலுவலகத்திற்குள் புகுந்து குழப்பம் விளைவித்தனர்.

இந்நிலையில் ரயில் பயணச்சீட்டு பரிசோதனையின் போது ஏற்பட்ட இந்த மோதல் மற்றும் அசம்பாவிதம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.