கடமைக்கும் கனவுக்கும் இடையே போராடும் ஒரு பெண் பஸ் கண்டக்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று வருகிறது. வர்ஷினி என்ற இன்ஸ்டாகிராம் பயனர், தனது அலுவலக வேலையை முடித்துவிட்டு மிகவும் களைப்புடன் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தக் காட்சியைக் கண்டு வியந்துள்ளார். கூட்ட நெரிசலும் சத்தமும் நிறைந்த பேருந்தில், தனது சீருடையுடன் அமர்ந்திருந்த ஒரு பெண் கண்டக்டர், பணிகளுக்கு இடையே கிடைத்த மிகச்சிறிய இடைவெளியில் ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோ “நிறுத்தங்களுக்கும் பொறுப்புகளுக்கும் இடையே, அவள் இன்னும் தனது கனவுகளைத் தேர்ந்தெடுக்கிறாள்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ளது.

​”வேலையை முடித்துவிட்டு களைப்பாக வந்த எனக்கு, இவரது விடாமுயற்சி மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது” என வர்ஷினி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும், “சூழலைக் காரணம் காட்டிப் படிப்பைப் பாதியில் விடுபவர்களுக்கு இவரே ஒரு மிகச்சிறந்த பாடம்” எனப் பாராட்டி வருகின்றனர். “உண்மையான அர்ப்பணிப்பு இதுதான்”, “சிறு சிறு கணங்களே வெற்றிக்கான படிக்கட்டுகள்” என நெட்டிசன்கள் அந்தப் பெண் கண்டக்டரின் லட்சியத்தைப் போற்றி வருகின்றனர்.