சென்னையில் சாலையில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவிக்கு உதவி செய்ததை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிட்ட பால விக்னேஷ் என்ற யூடியூபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாலையில் மயங்கிக் கிடந்த மாணவிக்கு உதவி செய்வது போல அந்த யூடியூபர் வீடியோ எடுத்துள்ளார். ஆனால், அந்த வீடியோவை தனது அனுமதி இன்றி ‘கண்டென்ட்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவேற்றியதால் தனது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அந்த மாணவி சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் அண்ணா நகர் போலீசார் யூடியூபர் பால விக்னேஷ் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். “உதவி செய்வது வரவேற்கத்தக்கது, ஆனால் அதைப் படம்பிடித்து ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் பொதுவெளியில் வெளியிடுவது சட்டப்படி குற்றம்” என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரீல்ஸ் மற்றும் யூடியூப் வியூஸ்களுக்காகத் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு இந்தப் புகார் ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
