கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள எடத்தலா பகுதியைச் சேர்ந்தவர் ஷம்லா (29). இவருக்கு பெரும்பாவுர் அருகே உள்ள மஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் பேசி வந்த நிலையில், அந்த வாலிபரை திருமணம் செய்து கொள்வதாகவும், தனது தொழிலில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வதாகவும் ஷம்லா ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த வாலிபர், கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வங்கி கணக்கு மற்றும் ஜிபே  வழியாக பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.50 லட்சத்தை ஷம்லாவிடம் செலுத்தியுள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட ஷம்லா, வாலிபரை திருமணம் செய்யாமலும், தொழிலில் சேர்க்காமலும் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் பெரும்பாவுர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஷம்லா திட்டமிட்டு ரூ.50 லட்சம் மோசடி செய்தது உறுதியானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், இதே பாணியில் மலப்புறம், வயநாடு, கோதமங்கலம் மற்றும் ஆலுவா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சமூக வலைத்தளங்கள் மூலம் வாலிபர்களைக் கவர்ந்து, திருமணம் செய்வதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. குறிப்பாக, கோதமங்கலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.20 லட்சமும், ஆலுவாவைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.11 லட்சமும் அவர் சுருட்டியுள்ளார். இவ்வாறு பலரிடம் ஏமாற்றிய பணத்தைக் கொண்டு ஷம்லா மிகவும் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.