பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாச்சா கான் பல்கலைக்கழகத்தில், இந்திய தேசிய கீதமான “ஜன கண மன” பாடலைப்பாடிய நான்கு மாணவர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 12 முதல் 15 வரை நடந்த இளைஞர் திருவிழாவின் போது, மருந்தியல் (Pharmacy) துறை மாணவர்கள் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது மாணவர் ஜிப்ரான் ரியாஸ் தனது நெஞ்சில் கையை வைத்து இந்திய தேசிய கீதத்தைப் பாட, சக மாணவர்களும் உற்சாகமாக அவருடன் சேர்ந்து பாடினர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள சில தீவிரவாத அமைப்பினர் அந்த மாணவர்களை மிரட்டி, பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக முழக்கமிட வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் ஜிப்ரான் ரியாஸ், சையத் ரியாஸ் அகமது, பஷீர் கான் மற்றும் முராத் கான் ஆகிய நான்கு மாணவர்களைப் பல்கலைக்கழகம் மற்றும் விடுதியிலிருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.

இது நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இதே சார்சடா நகரில் சில நாட்களுக்கு முன்பு ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகள் பேரணி நடத்தியபோது போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், வெறும் பாடல் பாடிய மாணவர்களின் கல்வியைப் பறிப்பது எந்த விதத்தில் நியாயம் என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தானின் இந்த இரட்டை நிலைப்பாடு சர்வதேச அளவில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.