2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதவுள்ள நிலையில், இது குறித்துப் பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் விரிவான விளக்கமளித்தார்.

ஏப்ரல் – மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதாலும், முதலீட்டாளர்களின் நலன் கருதியும் திட்டமிட்டபடி பொங்கலுக்கே படத்தை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக நடிகர் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷிடம் தான் பேசியதாகவும், விஜய்யிடம் அனுமதி பெற்ற பின்னரே ரிலீஸ் தேதி இறுதி செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விஜய்யின் திரைப்பயணத்தில் இது கடைசிப் படம் என்பதால், ஜனவரி 9-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ படத்தைக் கொண்டாடுமாறும், அதற்கு அடுத்த நாள் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் ‘பராசக்தி’ படத்திற்கும் ஆதரவு தருமாறும் ரசிகர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். “33 ஆண்டுகளாக நம்மை மகிழ்வித்த ஒருவரின் கடைசிப் படத்தை அனைவரும் கொண்டாட வேண்டும்; அதே சமயம் பராசக்தி படத்தையும் ரசிக்க வேண்டும்; இது ஒரு ஆரோக்கியமான அண்ணன் – தம்பி பொங்கல் போட்டியே” என்று அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார்.

1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்ட ‘பராசக்தி’ மற்றும் அரசியல் திரில்லராக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ ஆகிய இரு படங்களும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ளன.