தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான ஜனகராஜ் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

1978-ல் ‘கிழக்கே போகும் ரயில்’ மூலம் அறிமுகமாகி, ரஜினி, கமல் எனப் பல ஜாம்பவான்களுடன் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜனகராஜ், ஒரு காலக்கட்டத்தில் திரையுலகை விட்டு விலகி அமெரிக்காவில் குடியேறினார்.

இதனால் அவர் அங்கு மனநிலை சரியில்லாமல் ஆட்டோ ஓட்டுகிறார் என்றும், அவருக்கு மின்சார அதிர்ச்சி (Electric Shock) அளிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால், இவை அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்று பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

ஜனகராஜின் முகத் தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்த அதிர்ச்சிகரமான பின்னணியையும் அவர் விளக்கியுள்ளார். ஒருமுறை காரில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணித்தபோது, எதிர்பாராத விதமாக ஒரு கல் ஜனகராஜின் முகத்தில் பலமாகத் தாக்கியுள்ளது.

இந்த விபத்தில் அவரது முக நரம்புகள் பாதிக்கப்பட்டு ‘முகவாதம்’ (Bell’s Palsy) ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது ஒரு கண் சிறியதாகவும், முகம் ஒரு பக்கம் இழுத்தவாறும் மாறியது. இந்த இக்கட்டான நிலையிலும், இயக்குனர் பாரதிராஜா தனது ‘காதல் ஓவியம்’ படத்தில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்து அவரது திரைப் பயணத்தைத் தொடரச் செய்தார்.

தனது தனித்துவமான குரல் மற்றும் முக பாவனைகளால் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ஜனகராஜ், தற்போது நலமுடன் இருப்பதாகவும், பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.