விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் கசிந்த விவகாரம், தற்போது அரசியல் மோதலாக உருவெடுத்துள்ளது. இது குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “ஒட்டுமொத்த சினிமா துறையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மத்திய அமைச்சர் அமித்ஷா முயற்சிக்கிறார். அதன் ஒரு பகுதிதான் இந்தத் திரைப்படம் லீக் ஆனது” எனப் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பாஜகவின் சித்தாந்தத்திற்கு எதிராக யாரும் படம் எடுக்கக் கூடாது என மிரட்டுவதற்காகவே இது போன்ற வேலைகள் செய்யப்படுவதாக அவர் சாடியுள்ளார்.
சினிமா கலைஞர்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்க அமித்ஷா நினைப்பதாகவும், அதற்கு அடிபணியாதவர்களின் படங்களை இதுபோல முடக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘ஜனநாயகன்’ படத்தின் வசூலைப் பாதிக்கும் வகையில் திட்டமிட்டுச் செய்யப்பட்ட இந்தச் செயலுக்குப் பின்னால் அமித்ஷாவின் பங்கு இருப்பதாக அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மாணிக்கம் தாகூரின் இந்தப் பேச்சுக்கு பாஜக தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது.
