மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாமல் போனது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் எதிர்க்கட்சிகளை, குறிப்பாக திமுக-வை கடுமையாகச் சாடியுள்ளார்.

“இந்த மசோதா நிறைவேற்றப்படாததற்கு நான் நாட்டின் பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பெண்களின் அதிகாரக் கனவை எதிர்க்கட்சிகள் தகர்த்துவிட்டன. மசோதா தோல்வியடைந்ததை அவர்கள் கொண்டாடுவது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழக அரசியல் குறித்துப் பேசிய பிரதமர், “இந்த மசோதா நிறைவேறியிருந்தால் தமிழகத்தின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

அதன் மூலம் தமிழகத்தின் குரல் டெல்லியில் இன்னும் வலிமையாக ஒலித்திருக்கும். ஆனால், திமுக தனது அரசியல் ஆதாயத்திற்காகச் சொந்த மாநிலத்திற்கே துரோகம் இழைத்துவிட்டது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தைத் தடம் புரள வைத்தவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தனது உரையில் எச்சரித்தார்.