
மத்தியப் பிரதேச மாநிலத்தின் மைஹார் மாவட்டத்தில், அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது 21 வயதான இளம்பெண் ஒருவர், தனது மைத்துனரால் ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து ரேவா நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணை மைஹார் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் கூற்றுப்படி, ஜூன் 26ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ரேவாவை அடைந்த அவர், அங்கு அவரது மைத்துனரை சந்தித்து, இருவரும் காலை உணவு முடித்ததும் ஹைதராபாத் செல்லும் ரயிலில் பயணித்துள்ளனர். இது குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும், இருவரும் கட்னி ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். பின்னர் இரவு 9 மணிக்கு ரேவாவுக்குத் திரும்புவதற்காக ஸ்லீப்பர் பேருந்தில் ஏறியுள்ளனர். இரவு 10.30 மணியளவில், அமர்பதான் அருகே பேருந்தில் இருந்தபோது, மைத்துனர் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஜூன் 28 அன்று சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, தன் மூத்த சகோதரியிடம் நடந்ததையெல்லாம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரேவா எஸ்பி சுதிர் அகர்வால் வழக்கை தீவிரமாக கையாள உத்தரவிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மைத்துனரை போலீசார் தற்போது வலைவீசி தேடி வருகின்றனர். நம்பிக்கையான உறவுகள் கூட உயிருக்கு ஆபத்தாக மாறும் இந்த சம்பவம், சமூகத்தில் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.