சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ செய்து புகழ்பெற ஆசைப்பட்ட கேரள மாணவர் ஒருவருக்கு, அவர் வாங்கிய காரின் விலையை விடக் கூடுதலான தொகையை போக்குவரத்து போலீசார் அபராதமாக விதித்துள்ளனர்.

 கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2002-ம் ஆண்டு மாடல் ‘ஹோண்டா சிட்டி’ கார் ஒன்றை சுமார் 70,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அந்தப் பழைய காரை மிகவும் நவீனமாகவும், கவர்ச்சிகரமாகவும் மாற்ற எண்ணிய அவர், அதில் பல்வேறு சட்டவிரோத மாற்றங்களைச் செய்துள்ளார்.

காரின் நிறத்தை மாற்றி, ‘பேங்கர்’ (Banker) எனும் கிராஃபிட்டி எழுத்துக்களைப் பொறித்ததுடன், இயந்திர பாகங்களையும் மாற்றியமைத்துள்ளார். குறிப்பாக, ரேசிக் கார்களைப் போல அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர் மற்றும் அதிலிருந்து தீப்பிழம்புகள் (Fire-breathing exhaust) வெளியேறும் வகையில் ஆபத்தான மாற்றங்களைச் செய்திருந்தார்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்த காரில் பெங்களூரு வந்த மாணவர், நகரின் முக்கிய சாலைகளில் காரை அதிவேகமாக ஓட்டியும், சைலன்சரில் தீப்பிழம்புகளை வரவழைத்தும் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமும் இரைச்சல் தொந்தரவும் அடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் குவிந்ததை அடுத்து, பெங்களூரு போக்குவரத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். வடகிழக்கு பெங்களூருவின் பாரதியா சிட்டி பகுதியில் அந்த காரைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். யெலஹங்கா வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) நடத்திய ஆய்வில், அந்த காரில் பின்வரும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டன:

    • அனுமதியின்றி காரின் நிறத்தை மாற்றியது.

    • பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தீப்பிழம்புகளை வெளியேற்றும் சைலன்சர் பொருத்தியது.

    • காதுகளுக்குத் தாங்க முடியாத அளவுக்கு இரைச்சல் எழுப்பியது.

    • காரின் கட்டமைப்பைச் சட்டவிரோதமாக மாற்றியது.

இதையடுத்து, அந்த மாணவருக்கு மொத்தம் ரூ. 1.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இது அவர் கார் வாங்கிய விலையை விட 40,000 ரூபாய் அதிகமாகும். “ரீல்ஸ் மோகத்தால் கார் வாங்கிய விலையை விட அபராதத்திற்கு அவர் அதிகம் செலவழித்துள்ளார்” என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் கேலியாகத் தெரிவித்தார். மோட்டார் வாகன சட்டப்படி உரிய அனுமதியின்றி வாகனங்களை மாற்றியமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும், மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.