அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருக்கும் வேளையில், கட்சியின் மிக முக்கிய சீனியர் தலைவரும் முன்னாள் அமைச்சருமான தனபால், அதிமுகவில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகிவிட்டதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தனது மகனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக லோக் பவன் வந்திருந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்த அதிரடி முடிவை வெளியிட்டார். கட்சிக்காக ஆரம்பக்காலத்தில் இருந்து ரத்தம் சிந்தி, சைக்கிள் ஓட்டிச் சென்று அதிமுகவை வளர்த்த தன்னை, தற்போது கட்சித் தலைமை முற்றிலும் புறக்கணித்துவிட்டதாக மிகுந்த வேதனையுடன் குற்றம் சாட்டியுள்ளார்.

​மேலும், தனக்கு அதிமுகவில் உரிய முக்கியத்துவமும் மரியாதையும் வழங்கப்படவில்லை என்றும், இதனால் கட்சியில் நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் அவர் ஓப்பனாக உடைத்துப் பேசியுள்ளார். சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் காரணமாக கட்சியை விட்டு வெளியேறும் 3-வது முன்னாள் அமைச்சர் தனபால் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து சீனியர் எக்ஸ் அமைச்சர்கள் விலகி வருவது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்பட்டு, அரசியல் வட்டாரத்தில் காட்டுத்தீயாய் விவாதிக்கப்பட்டு வருகிறது.