தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எழுப்பிய விமர்சனத்திற்கு, அக்கட்சியின் மற்றொரு மூத்த நிர்வாகியான செல்லூர் ராஜு மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியிருந்த செங்கோட்டையன், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்த்தாரா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதிமுகவின் உட்கட்சிப் பூசலுக்கு மத்தியில், செங்கோட்டையனின் இந்தத் திடீர் விமர்சனம் அக்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, செங்கோட்டையனின் கருத்துக்குத் தனது பாணியில் கிண்டலாகவும் ஆவேசமாகவும் பதிலளித்தார். அவர் கூறியதாவது:
“தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது செங்கோட்டையன் என்ன மாங்காய் பறிக்கவா சென்றிருந்தார்? அந்தச் சம்பவம் நடந்தபோது அவர் எங்களுடன்தான் இருந்தார். இப்போது அரசியல் ஆதாயத்திற்காக இப்படிப் பேசுவது முறையல்ல. செங்கோட்டையன் இப்போது ஒரு ‘செல்லாக் காசு’ போன்றவர். அவரைப் பற்றி நாங்கள் எப்போதோ மறந்துவிட்டோம் என்றார்.
கட்சியில் நீண்டகாலம் ஒன்றாகப் பயணித்த இரு முன்னாள் அமைச்சர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி மோதல், அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் செல்லூர் ராஜு வரிந்துகட்டிக்கொண்டு களமிறங்கியிருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
