
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மூக்கனூர் பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோடீஸ்வரன் 2000 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு கோடீஸ்வரன் வேலைக்காக சிங்கப்பூர் சென்று விட்டார். ஒரு வாரத்திற்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் மணிகண்டனுக்கு கடன் கொடுத்த விவரத்தை கோடீஸ்வரன் தனது உறவினரான கிருபாகரன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கிருபாகரன் மணிகண்டன் உடன் சிலர் மது அருந்தி உள்ளனர்.
அப்போது தனது அண்ணனான கோடீஸ்வரனுக்கு கொடுக்க வேண்டிய 2000 ரூபாய் பணத்தை கிருபாகரன் கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே கிருபாகரன் கோடீஸ்வரனுக்கு தகவல் தெரிவித்து அவரை வரவழைத்தார். தகராறு முற்றியதால் ஒரு கட்டத்தில் மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோடீஸ்வரனை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கோடீஸ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று கோடீஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மணிகண்டனை தேடி வருகின்றனர்.