சென்னையில் உள்ள கூவம் ஆற்று கரையில் கடந்த ஜூலை 8ஆம் தேதி 25 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம், தற்போது அதிர்ச்சி விளைவிக்கும் கொலை வழக்காக மாறியுள்ளது. சென்னை எம்.எஸ்.நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறம் சடலம் கிடந்தது குறித்து ஏழுகிணறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பதியை சேர்ந்த ஸ்ரீனிவாசலு ராயுடு (வயது 22) என்பவர் உயிரிழந்தவர் என அடையாளம் கண்டறியப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிலர் காரில் வந்துவிட்டு, ஸ்ரீனிவாசலுவின் உடலை கூவம் ஆற்றில் வீசி தப்பிச் சென்றதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியைச் சேர்ந்த ஐ.டி.விங்க் நிர்வாகி சிவக்குமார், காளஹஸ்தி தொகுதி நிர்வாகி விணுதா கோட்டா, அவரது கணவர் சந்திரபாபு, உதவியாளர் கோபி, மற்றும் கார் ஓட்டுநர் ஷேக் தாசன் ஆகியோர் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அந்த விசாரணையில், விணுதா ஜெனசேனா கட்சியின் காளஹஸ்தி தொகுதியில் செயலில் இருந்தவராகவும், ராயுடு கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து அவரது வீட்டில் தங்கி வேலை செய்தவராகவும் தெரியவந்தது. ஒரு நாள், விணுதா தனது படுக்கையறையில் உடை மாற்றும் போது, கட்டிலுக்கடியில் ஒரு செல்போனை கண்டுபிடித்து, அதில் தன்னுடைய உடை மாற்றும் வீடியோ இருப்பதைக் காண்பித்து அதிர்ச்சி அடைந்தார். அந்த வீடியோ, ராயுடுவால் ரகசியமாக பதிவு செய்யப்பட்டதாக சந்தேகப்பட்டது. விசாரணையில், ராயுடு தனது மனைவியின் அந்தரங்க வீடியோக்களை பதிவு செய்யத் தூண்டியது, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வானி தொகுதி MLA பஜாலா சுதீர் ரெட்டி என்பவர்தான் என்றும், அவர் பணம் கொடுத்து கட்சி தகவல்களை வெளியிட சொன்னதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், விணுதா மற்றும் சந்திரபாபு இருவரும் ராயுடுவை வீட்டு வாசலில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக போலீசார் கூறுகின்றனர். மேலும், கடந்த ஜூலை 7ஆம் தேதி, ராயுடு கழிவறைக்குச் சென்றவுடன் ஒரு மணி நேரமாகியும் வெளியே வராததால், கதவை உடைத்து பார்த்தபோது தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளனர். ஆனால், போலீசார் இதை சந்தேகத்திற்கிடமான மரணம் எனக் கருதி, தீவிர விசாரணையில் இறங்கினர். சடலத்தை வெளியே கொண்டு வந்து தூக்கி வீசியது, ராயுடு மரணம் தற்கொலை அல்ல, இது திட்டமிட்ட கொலை என உறுதிப்படுத்துகிறது.

ஏழுகிணறு போலீசார், ஆந்திர போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். சித்ரவதை செய்யப்பட்ட இடத்தையும், மேலும் ஆதாரங்களை திரட்டும் பணியையும் தொடங்கி உள்ளனர். இச்சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஸ்ரீனிவாசலு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஜனசேனா கட்சி சார்பினர் என்பது உறுதி. இந்த வழக்கு குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தற்போது பொதுப்பரப்பிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஜனசேனா மற்றும் தெலுங்கு தேச கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்குள் உள்ள உள் அரசியல், மற்றும் அந்தரங்க வீடியோ விவகாரம், கொலைக்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது குற்றவாளிகள் அனைவரும் காவலில் வைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.