கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திக் நவுபியா.  இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் பள்ளிக்கால் பகுதியில் உள்ள உறவினர் அன்சில்  வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தனர். மதிய உணவை முடித்துவிட்டு மாலை வேளையில் புதுமண தம்பதியும் அன்சில் குடும்பத்தினரும் அருகே இருந்த ஆற்றுக்கு சென்றனர். அங்கிருந்து பாறை ஒன்றின் மேல் நின்று புதுமண தம்பதி செல்பி எடுக்க ஆசைப்பட்டனர். இதையடுத்து பாறையின் மீது ஏறி செல்பி எடுக்க முயற்சித்த போது திடீரென இருவரும் ஆற்றுக்குள் தவறி விழுந்து விட்டனர்.

ஆற்றில் விழுந்தவர்களை தண்ணீர் அடித்து செல்வதை பார்த்த அன்சில் அவர்களை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் அவரும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி உள்ளார். இதையடுத்து கரையில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு அன்சிலை சடலமாக மீட்டனர். தம்பதியின் உடல்கள் வெகு நேரமாக தேடிய நிலையில் பாறை இடுக்கில் சிக்கியபடி இருவரின் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது. செல்பி எடுக்கும் ஆசையில் புதுமண தம்பதி உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.