
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம், மான்சார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நிகோட்வாடி கிராமத்தில், சட்டவிரோத கட்டிட பணிகளை ஒளிப்பதிவு செய்யச் சென்ற பெண் பத்திரிகையாளர் மற்றும் மூவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். லோக் மாத் ஊடக நிறுவனத்தில் பணி புரிந்து வரும் ஸ்நேஹா பார்வே என்பவர், சர்வே எண் 41/1 பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட குடில்கள் மற்றும் கடைகளுக்கான புகாரின் பேரில் செய்தி தொகுக்க சென்றிருந்தார்.
View this post on Instagram
அவருடன் விஜேந்திர தோரத், சந்தோஷ் காலே மற்றும் புகார் அளித்தவர் சுதாகர் பாபுராவ் காலே என்பவரும் இருந்தனர். அவர்கள் அங்கு செய்திக்காக காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்தபோது, பாண்டுரங்க மோர்தே, அவரது மகன்கள் பிரஷாந்த், நிலேஷ் மற்றும் 8-9 பேர் கொண்ட குழு அங்கு வந்துள்ளனர். அவர்கள் மரகம்புகள் கம்பிகள் மூலம் பத்திரிகையாளரையும், மற்றவர்களையும் தாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வீடியோவில், ஸ்நேஹா பார்வே செய்தி அளிக்கையில், திடீரென குழு வருவதும், அவரை தாக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. தாக்குதல் சம்பவம் லிப்ட் லாபி வரை தொடர்ந்தது. இது தொடர்பாக சுதாகர் காலே மான்சார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, 12 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர் பட்குஜர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.