தமிழ்நாட்டில் புதிய ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், மொத்தம் 1,07,910 விண்ணப்பங்கள் அரசின் தீவிரப் பரிசீலனையில் இருப்பதாகத் தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

தகுதியான அனைவருக்கும் விரைவிலேயே புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்றும் அத்துறை உறுதி அளித்துள்ளது. இதனால், புதிய ரேஷன் அட்டைக்காகக் காத்திருப்போர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் அட்டை தேவைப்படுவோர், அரசின் அதிகாரபூர்வ இணையதளமான tnpds வலைத்தளத்தின் மூலமாகவோ (ஆன்லைன்), அல்லது அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவோ (ஆஃப்லைன்) விண்ணப்பிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன், அதிகாரிகளால் கள ஆய்வு செய்யப்பட்டுத் தகுதியின் அடிப்படையில் புதிய அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை மூலம், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பலன்கள் சரியான மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய அரசு தீவிரமாக உள்ளது.