மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 3ஆம் தேதி இன்று காலை 8 மணி அளவில் திமுகவினர் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினா கடற்கரை அருகே உள்ள அண்ணா நினைவிடத்திற்கு மௌன ஊர்வலம் செல்கின்றனர். மெரினாவை சுற்றியுள்ள சாலைகளில் வாகனங்கள் தடையின்றி செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வாகன நெரிசல் அதிகமானால் போர் நினைவிடத்திலிருந்து நேம்பியர் பாலம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் கொடிமர சாலை வழியாகவும் காந்தி சிலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரக்கூடிய வாகனங்கள் கண்ணகி சிலை சந்திப்பிலிருந்து பாரதி சாலை வழியாக செல்ல வேண்டும். அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலையை நோக்கி ஊர்வலம் செல்லும் போது அண்ணா சிலையிலிருந்து பெரியார் சிலையை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்படும் எனவும் வாகன ஓட்டிகள் தங்களுடைய பயணத்தை திட்டமிட்டு இந்த சாலைகளை தவிர்த்து மற்ற பாதையில் செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.