நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வில் கடுமையான ஆடை கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட 19 வயது மாணவி ஒருவர்  மதுரை கிளை  உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மாணவி தீவிபத்தில் சிக்கியதால் தனக்கு சிறுநீரகத்தில் பிரச்சனை இருப்பதால் டயப்பர் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

அதோடு தேவைப்படும்போது கழிவறைக்கு சென்று டயப்பரை மாற்றிக் கொள்ளவும் அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மாணவிக்கு டயப்பர் அணிந்து தேர்வு எழுத அனுமதி கொடுத்தார். அதோடு மாணவியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு டயப்பர் அணிந்து தேர்வு எழுத தேசிய தேர்வு முகமை அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் ஆடை கட்டுப்பாட்டில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் பயன்படுத்த அனுமதி கொடுக்காததால் தான் மாணவி டயப்பர் அணிந்து தேர்வு எழுத அனுமதி வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனவே நீட் தேர்வில் மாணவிகளுக்கு சானிட்ரி நாப்கின் பயன்படுத்த தேசிய தேர்வு முகமை அனுமதி கொடுத்திருக்க வேண்டும் என கூறி நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.