தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தற்போது தவெகவின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அவர் தவெகவில் இணைந்ததையடுத்து, பல்வேறு கட்சிகளிலிருந்தும் நிர்வாகிகள் தவெகவை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியைச் (நாதக) சேர்ந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்த அபிஷேக் என்பவரின் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் இன்று (நவ. 30) தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.

அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளைத் தன்பக்கம் இழுத்த தவெக, தற்போது நாம் தமிழர் கட்சியிலும் நிர்வாகிகள் மத்தியில் தனது செல்வாக்கை நிலைநாட்டியுள்ளது. தவெகவில் இணைந்த நாதக நிர்வாகிகளை வரவேற்ற செங்கோட்டையன், அவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்.பி. சத்தியபாமா என மூத்த நிர்வாகிகள் இணைந்ததைத் தொடர்ந்து, நாதகவிலிருந்து அடுத்த தலைமுறை நிர்வாகிகளும் தவெகவில் இணைந்திருப்பது, எதிர்வரும் தேர்தல்களில் தவெகவின் பலத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.