அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட முக்கியப் புள்ளிகள் பலரும் திமுக, தவெக என மாற்று முகாம்களுக்குத் தாவி வரும் நிலையில், சசிகலாவின் லேட்டஸ்ட் ‘பஞ்ச்’ அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததை “துரதிர்ஷ்டவசமானது” என்று குறிப்பிட்ட சசிகலா, “அவரின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது” என மரண அடி கொடுத்துள்ளார். துரோகிகளுடனும், எதிரிகளுடனும் கைகோர்ப்பதை விட அரசியலில் இருந்து விலகி இருப்பதே மேலானது என அவர் ஓபிஎஸ்ஸை வறுத்தெடுத்துள்ளார்.

​அதே சமயம், அதிமுகவின் சீனியர் தலைவரான செங்கோட்டையன் எடுத்த அதிரடி முடிவை சசிகலா மனமாரப் பாராட்டியுள்ளார். “எதிரியுடனும் சேராமல், துரோகிகளுடனும் இணையாமல் செங்கோட்டையன் புதிய கட்சிக்குச் சென்றிருப்பது நல்ல முடிவு” என்று அவர் பாராட்டித் தள்ளியுள்ளார். சசிகலாவின் இந்த இரட்டை நிலைப்பாடு – அதாவது ஓபிஎஸ்ஸுக்கு எதிராகவும், செங்கோட்டையனுக்கு ஆதரவாகவும் அவர் பேசியிருப்பது – அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.