கொதிக்கும் எண்ணெயில் கையை நனைத்து பஜ்ஜி எடுப்பதைப் பார்த்தாலே சாதாரண மனிதருக்கு நடுக்கம் ஏற்படும். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஷிகா காஷ்யப்பிற்கு இது ஒரு இயல்பான அனுபவமாக உள்ளது.

‘கான்பூர் சமோசா பெண்’ என்ற பெயரில் அழைக்கப்படும் ஷிகா, கொதிக்கும் எண்ணெய் பாத்திரத்தில் கரண்டி பயன்படுத்தாமல் நேரடியாக கையை நனைத்து மிளகாய் பஜ்ஜியை எடுப்பதைக் காண்பிக்கும் காணொளி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளி நெட்டிசன்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

வைரலாகி வரும் அந்த காணொளியில், ஷிகா சூடான எண்ணெயில் ப்ஜ்ஜியை தனது கையால் எடுத்து மாற்றுவதை காணலாம். இதைக் கண்ட அங்கிருந்த வாடிக்கையாளர்களே திகைத்துப் போன நிலையில் இருந்தனர். காணொளியில், ஒருவர் பக்கோடாவைத் தொட்டு அதன் சூட்டைச் சோதித்தபோது, எண்ணெய் உண்மையிலேயே கொதித்துக் கொண்டிருந்தது உறுதியாகிறது.

ஊடகத் தகவலின்படி, ஷிகாவின் தந்தை கடந்த 35 ஆண்டுகளாக கான்பூரில் சமோசா–பஜ்ஜி கடையை நடத்தி வருகிறார். வீட்டில் வெறுமனே இருப்பதற்குப் பதிலாக, குடும்பத் தொழிலுக்கு உதவ முடிவு செய்த ஷிகா, தனது தனித்துவமான திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்த அபூர்வ திறமை காரணமாக, ஷிகா இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார். கொதிக்கும் எண்ணெயில் கையை நனைத்து பஜ்ஜி எடுப்பது எப்படி என்று ஷிகாவுக்கே தெரியும் எனக் கூறப்படும் நிலையில், கான்பூர் மக்கள் அவரது கடைக்கு பஜ்ஜி சுவையை ரசிப்பதோடு, அவரது திறமையைப் பார்க்கவும் திரண்டு வருகின்றனர். சிலர், ‘ஷிகா தீதி’ எப்படி இதைச் செய்கிறார் என்பதை நேரில் காணவே கடைக்கு வருவதாகக் கூறப்படுகிறது.