நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் நாங்கள் ஆட்சி அமைக்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்கி விடுவோம் என்று கூறினார். இது தற்போது தனக்கு மிகுந்த வேதனையை தந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தான் அதிகாரத்துக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவதாக சீமான் பேசியுள்ளார்.

அவர் எதை நினைத்து இப்படி கூறினார் என்பது எனக்கு தெரியவில்லை. தமிழ்நாடு அரசியல் என்று வரும்போது முதலில் கல்வியில் தான் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசியலுக்கு மைய புள்ளியே கல்விதான். அப்படி இருக்கும்போது தாய் மொழியை தூக்குவேன் என்று சீமான் சொன்னது தனக்கு வேதனையை தருவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் ஆளுநர் ரவி கலந்து கொண்ட டிடி தமிழ் தொலைக்காட்சி ஹிந்தி தினவிழாவின்போது தமிழ் தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் திமுகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் திராவிடம் என்ற சொல்லை நீக்கிவிட்டு தமிழ் தாய் வாழ்த்தில் தமிழர் என்ற வார்த்தையை சேர்த்து இணையதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

அதோடு ஒரு சிறிய பிரச்சனையை திமுகவினர் மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றுவதாகவும் தான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவேன் என்றும் தமிழுக்கு என்னால் விளக்கம் சொல்ல முடியும் அதே போன்று திராவிடத்திற்கு உங்களால் விளக்கம் சொல்ல முடியுமா என்று அவர் முன்னதாக தன் பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.