காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச ஆதரவைத் திரட்ட பாகிஸ்தான் எடுத்து வரும் தொடர் முயற்சிகளுக்குப் பலத்த பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீர் முழுவதையும் இந்தியாவின் ஒரு பகுதியாகச் சித்தரிக்கும் புதிய வரைபடத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் பலமுறை வாஷிங்டன் பயணம் மேற்கொண்டனர். சமீபத்தில் நடைபெற்ற ‘காஷ்மீர் ஒற்றுமை தின’ உரையில் கூட ஷபாஸ் ஷெரீப் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசியிருந்தார். இருப்பினும், சர்வதேச அளவில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்ப பாகிஸ்தான் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா வர்த்தகக் கூட்டமைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கப்படத்தை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதி முழுமையாக இந்திய எல்லைக்குள் காட்டப்பட்டுள்ளது. அதேபோல், சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள அக்சய் சின் பகுதியும் இந்திய நிலப்பரப்பாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரைபடத்தின் மூலம், இந்தியாவின் இறையாண்மையை அமெரிக்கா அங்கீகரிப்பதோடு, இந்தியா தனது முதன்மையான மற்றும் மாற்ற முடியாத உலகளாவிய கூட்டாளி என்பதையும் அமெரிக்க அரசு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்பு பகுதிகளை இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டும் இந்த வரைபடம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இது பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச ராஜதந்திர ரீதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.