அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்.எல்.ஏ இன்று  கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரப் போக்கினாலேயே அதிமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். தேர்தலுக்குத் தேர்தல் கட்சியின் வாக்கு சதவீதம் சரிந்து வருவதோடு, அதிமுக மக்களின் நன்மதிப்பை இழந்து, சீட்டுக்கட்டு போலச் சரிந்து கொண்டிருக்கிறது என்றும் அவர் சாடினார்.

பாமக கூட்டணியில் இல்லாமல் போயிருந்தால் கடந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமியே தட்டுத்தடுமாறித்தான் வெற்றி பெற்றிருப்பார் என்றும், தற்போது தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக அவர் நாடகம் ஆடி வருகிறார் என்றும் சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

மேலும் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி கட்சிக்காக உழைத்தவர்களைச் சர்வ சாதாரணமாகத் துரோகி என்று கூறுவதாகவும், யாருடைய கருத்தையும் கேட்காமல் தனது குடும்பத்தினரின் கருத்தையும் பணம் கொடுப்பவர்கள் கருத்தையும்  மட்டுமே கேட்டுச் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார். கட்சியின் தோல்விக்கான காரணத்தை உணராமல் பிறரைக் குறை சொல்வதை விடுத்து, உடனடியாக அதிமுக பொதுக்குழு அல்லது செயற்குழுவைக் கூட்டி தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மாற்று கருத்துக்களை ஏற்பவரே சிறந்த தலைவர் என்றும், அதிமுகவின் இந்தத் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமிதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.