அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் மேற்கொண்டு வரும் எழுச்சி பயணத்தின் ஒரு பகுதியாக, கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதற்காக மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு நாட்கள் பரப்புரை நடத்தும் திட்டத்தின் கீழ், இரண்டாவது நாளான நேற்று கரூரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: “கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என ஸ்டாலின் கூறுவது முழுமையான பொய். 1.5 லட்சம் ஆசிரியர்கள், நீதிமன்ற உத்தரவில் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளனர். அதிமுக ஆட்சியில் பள்ளிகளை திறந்தோம், ஆனால் திமுக ஆட்சியில் மட்டும் 207 பள்ளிகள் மூடப்பட்டன. இதைத்தான் கல்வியில் சிறந்தநிலை என்கிறார்கள்” என விமர்சித்தார்.
மேலும்,“மகளிர் உரிமைத்தொகை வழங்க திமுக அரசு முன்வந்ததற்கு அதிமுக அளித்த அழுத்தமே காரணம். தேர்தலை முன்னிட்டு அனைவருக்கும் இந்தத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கின்றனர். ரூ.12,400 கோடி விவசாயக் கடன்தள்ளுபடியை அதிமுக அரசு செய்தது” என அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் செந்தில்பாலாஜிதான். ஒவ்வொரு தேர்தலுக்கும் புதிய வேடங்களில் தோன்றுகிறார். வெள்ளிக் கொலுசு கொடுப்பதாக வாக்களித்துத், பிறகு போலி கொலுசு கொடுத்தவர். அவருடைய செயல் முறையே கிரிமினல் தனத்தை காட்டுகிறது” என்றார்.
மேலும் அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டன என்றும்,
96 அரசு கலைக்கல்லூரிகளில் தற்போது முதல்வர்கள் இல்லாத நிலை இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் அதிமுக-பாஜக கூட்டணிக்காக அனைத்துக் கட்சிகளும் பதற்றத்தில் உள்ளன என்றும், உரிமைக்காக போராடும் மக்களை தடுக்கக் கூடாது என்பதும் அவரது உரையின் முக்கிய அம்சமாக இருந்தது.
