வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களின் விலையை ரூ 200 குறைத்து உத்தரவிட்டிருக்கிறது மத்திய அரசு. அந்த 200 ரூபாயை மானியத் தொகையாக எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கவுள்ளது. இதனால் தற்போது ரூ 1,118க்கு விற்கப்படும் சிலிண்டர் விலை 900 வரை குறையும். ஏற்கனவே உஜ்வாலா சிலிண்டர் பயனர்களுக்கு 200 குறைக்கப்பட்டுள்ளதால் பொது அறிவிப்போடு சேர்த்து அவர்களுக்கு மொத்தம் 400 குறைக்கப்படுகிறது.

அதாவது, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதலாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் உஜ்வாலா திட்டத்தில் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 200 குறையும்.

அதன்படி, ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் சென்னையில் இனி சிலிண்டர் விலை ரூ.918ஆக இருக்கும். ஆனால் சிலிண்டர் டெலிவரி செய்ய வருவோர் கூடுதல் பணம் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எப்போதும் எழுந்து வருவது வழக்கம். இதனை கேலி செய்யும் விதமாக ரூ.32 கூடுதலாக போட்டு இனி ரூ.950 கொடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.