
சென்னை திருவொற்றியூர் பகுதியில் சாலையோரமாக காய்கறி கடை நடத்தி வந்தவர்கள் மாரி – கௌரி தம்பதி. இந்நிலையில் கௌரியை அங்கு வந்த ஒரு நபர் சராமாறியாக கத்தியால் தாக்கியுள்ளார். தடுக்க முயற்சித்த மாரியையும் அந்த நபர் தாக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அந்த நபரை மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதில் கௌரி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்தது ஆட்டோ ஓட்டுனரான சேகர் என்பது தெரியவந்துள்ளது.
மாரி கௌரி தம்பதி சேகருக்கு சொந்தமான இடத்தில் சிறுநீர் கழித்ததாக கூறி இரண்டு தரப்பினருக்கு இடையே 10 தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் கௌரி சேகரை செருப்பால் அடித்துள்ளார். இதற்கு பலி வாங்குவதற்காக தான் சேகர் கௌரியை கொலை செய்தது தெரியவந்துள்ளது.