நடிகர் சத்யராஜின் குடும்பத்தில் அரசியல் ரீதியான மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. சத்யராஜின் மகன் சிபிராஜ் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதும், விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய பிறகு அவருக்குத் தனது ஆதரவைத் தொடர்ந்து தெரிவித்து வருவதும் அனைவரும் அறிந்ததே.
இதற்கு நேர்மாறாக, சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அண்மையில் திமுகவில் இணைந்தார். மேலும், அவர் தனது உரைகளில் நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்தும் பேசி வருகிறார். சமீபத்தில் திமுகவின் வேட்பாளர் பட்டியலில் திவ்யாவின் பெயர் இடம்பெறாததை நெட்டிசன்கள் விமர்சித்தபோது, கட்சி தனக்கு உரிய நேரத்தில் வேறு பொறுப்புகளை வழங்கும் என்று அவர் பதிலளித்திருந்தார்.
இதனால் அண்ணன் ஒரு பக்கமும் தங்கை ஒரு பக்கமும் முரண்பட்ட அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதால், குடும்பத்திற்குள் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுகிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த திவ்யா சத்யராஜ், தனக்குத் தந்தை சத்யராஜும் சகோதரர் சிபிராஜும் தான் உலகம் என்றும், அவர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், “சிபி சாருக்கு நீல நிறம் பிடித்திருக்கிறது என்பதற்காக எனக்கும் அதே நிறம் தான் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை, எங்கள் குடும்பம் மிகவும் முற்போக்கானது, அதனால் அரசியல் மாற்றுக் கருத்துக்களால் எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை” என்று மிக முதிர்ச்சியுடன் விளக்கம் அளித்துள்ளார்.
