பிரபல நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த பிரிவிற்கு ஜெயம் ரவியின் தோழியும், பாடகியுமான கெனிஷா பிரான்சிஸ் தான் காரணம் என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. பல மாதங்களாக நிலவி வந்த இந்த சர்ச்சைக்கு கெனிஷா தற்போது வீடியோ மூலம் முதல்முறையாக பதிலளித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு வீடியோக்களை வெளியிட்டுள்ள கெனிஷா, அதில் கண்ணீர் மல்கப் பேசியிருப்பதாவது: “என்னை விமர்சிப்பவர்கள் நான் யார் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவரின் குடும்பத்தை நான் கெடுத்தேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு அறிவில்லையா? நான் 4 வயதில் இருந்தே குடும்ப உறுப்பினர்களால் வன்கொடுமைக்கு ஆளானவள். எனது தாய், தந்தை இருவரையும் இழந்து நிற்கிறேன்.

தனது இளவயது திருமண வாழ்க்கை குறித்துப் பேசிய அவர், “மிகவும் கொடுமையான சூழலில் எனது திருமணம் நடந்தது. குடும்ப வன்முறை காரணமாக எனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அந்தப் போராட்டங்களில் இருந்து மீண்டு வர நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். அம்மா, அப்பா, குழந்தை என அனைத்தையும் இழந்த நான், இன்னொருவர் குடும்பத்தை கெடுக்க நினைப்பேனா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயம் ரவி குறித்துப் பேசிய கெனிஷா, “அவர் தனது வாழ்க்கையில் ஒரு கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டபோது, அதற்கான சிகிச்சைக்காக  என்னை அணுகினார். அப்போதுதான் எங்களுக்குள் நட்பு தொடங்கியது. ஜெயம் ரவி ஒன்றும் சிறு குழந்தை அல்ல. தனது வாழ்க்கையில் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அப்படி இருக்கையில் என்னை ஏன் இதில் இழுக்கிறீர்கள்? சமூகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன, அதைப் பற்றிப் பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார்.