திரைப்பட நடிகைகள் குறித்து மேடைகளில் தரக்குறைவாகப் பேசுவது நாகரிகமான அரசியல் ஆகாது எனத் தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் பேச்சுக்குத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் (நாடக நடிகர் சங்கம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று  நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அதிமுக நிர்வாகி  சி.வி. சண்முகம், முன்னனித் திரைப்பட நடிகை நயன்தாராவின் பெயரைத் தேவையின்றி குறிப்பிட்டு, மிகவும் அவதூறான மற்றும் தரக்குறைவான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். பொதுவெளியில் ஒரு பெண்ணைப் பற்றி, அதுவும் ஒரு கலைத்துறையைச் சார்ந்த ஆளுமையைப் பற்றி இவ்வளவு கேவலமான முறையில் பேசுவது என்ன மாதிரியான அரசியல் நாகரிகம்? என்று சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசியல் மேடைகளில் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதற்குப் பெண்களையும், நடிகைகளையும் அநாகரிகமாகச் சித்தரிப்பதுதான் உங்கள் கட்சியின் கொள்கையா? எனத் தனது கண்டன அறிக்கையில் நடிகர் சங்கம் காட்டமாக வினவியுள்ளது.

திரைத்துறை என்பது பலரின் உழைப்பால் உருவானது. அதில் பணியாற்றும் பெண்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் வகையில் பேசுபவர்கள் எவராக இருந்தாலும், அதனை ஏற்க முடியாது. இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது மிகுந்த வருத்தத்திற்குரியது. எனவே, பொதுவாழ்வில் இருப்பவர்கள் நாவடக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் முன்னதாக உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுவேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். எனக்கு நயன்தாரா வேண்டும். முதலமைச்சர் அவரை கொடுப்பாரா என்று சிவி சண்முகம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.