சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த 66 வயதுடைய தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார்.

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலீமா யாக்கோபின் ஆறு வருட பதவிக்காலம் வருகின்ற 13-ஆம் தேதி நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்றது. அதிபர் ஹலீமா யாகோப் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த நிலையில் ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சி ஆதரவுடன் தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சீன வம்சாவளியை  சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான இங் கோக் சாங் மற்றும் தன் கின் லியான் ஆகியோர் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் அதிபர் தேர்தலில் போட்டி ஏற்பட்டது. நேற்று நடைபெற்ற தேர்தலில் முதல் முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்களும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், ஐக்கிய அமீரகம் ஆகிய 6 நாடுகளின் பத்து நகரங்களில் சிங்கப்பூர் மக்கள் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்த உடனையே பதிவான வாக்குகள் என்னபட்டன. அதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 70.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முக ரத்தினம் கடந்த 2001 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளவர். கடந்த 2011, 2019 ஆம் ஆண்டுகளில் துணை பிரதமராக பதவி வகித்தார். மேலும் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டு சங்கத்தின் அறங்காவலர் வாரிய தலைவராகவும் தர்மன் சண்முகரத்தினம் பதவி வகிக்கிறார்.