இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளம் ஐயா நல்லகண்ணு அவர்கள் மறைந்த நிலையிலும் ஒரு மிகப்பெரிய முன்னுதாரணத்தை விட்டுச் சென்றுள்ளார். அவரது உடல், அவர் உயிருடன் இருந்தபோது தெரிவித்த விருப்பத்தின்படியே, சென்னை மருத்துவக் கல்லூரி (MMC) மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட உள்ளது.
பொதுவாகத் தலைவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், தான் மறைந்த பிறகும் தனது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கும் படிப்புக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நல்லகண்ணு இந்த முடிவை எடுத்துள்ளார். இதற்காகச் சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் அந்த தியாகச் செம்மலின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர். ஒரு மாபெரும் மக்கள் தலைவனின் இந்த முடிவு சமூக வலைதளங்களில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
